Skip to main content
Srishti-2022   >>  Poem - Tamil   >>  Maganey O Maganey (மகனே ஓ மகனே)

Siva Praboth M S

SunTec Business Solutions

Maganey O Maganey (மகனே ஓ மகனே)

மகனே ஓ மகனே !!


என் கண்கள் இருளுதடா, 
இதயம் துடிக்க மறக்குதடா,
நீ இல்ல நிமிடம் கூட, 
வாழ்க்கை வாழ  மறுக்குதடா. 

உன் வழியில் குழி தோண்டி,
நம் வாழ்க்கைப் பள்ளம் ஆனதடா,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
அவர் மகனைத் தாங்காததேனடா ?
 
காற்றில்லா ஆழ்துளைக்குள்ளே,  
கதிரில்லா சிறு வழிக்குள்ளே, 
இருள் பொறுத்த , வலி பொறுத்த,
பசி பொறுத்து, மூச்சடக்கி உயிர் புடிச்ச;  

உனக்காக வரம் கேட்டேன்,
உயிர்ப் பிச்ச தரக் கேட்டேன்; 
ஆண்டவன் கை விட்டான்,
நாட்டை-ஆண்டவனும் கை  விட்டான். 

பசியெடுத்து வாடையிலே, 
கூறிருட்டு மூடயில,   
நினைவிழந்து  போகையில, 
என பத்தி என்ன நெனச்ச ?

இரண்டகம் செஞ்சவனு வஞ்சினியா? 
நம்பிக்கைத் துரோகினு வஞ்சினியா?
கண்டிப்பா வருவானு நம்புனியா !
அரவணைக்க மாட்டாளானு வெதும்பினியா !  

பால் கொடுத்த மார் எனக்கு,
பாரமாகிப் போனதையா !!
நீ படுத்த அடி வயிறோ, 
அனலாய்  எரிக்குதய்யா !!

புகழ்பெற்று நீ விளங்க, 
மனசார ஆசைப்பட்டேன்; 
ஊரெல்லாம் வாசகமாய், 
உன் மரணச் சேதி பரவுதய்யா. 

அம்மானு என்னை அழைக்க,
ஓடி வந்து அரவணைக்க ,
என் கண்ணின் நீர் துடைக்க,
உறவொன்னு கெடச்சிருமோ !!

எரிதணலில் வெந்தாலும்,
உன் நினைவுகள் அழிஞ்சிருமோ?
நினைவுகளோடு  வாழ்ந்தால், 
நாட்கள் நகர்ந்திடுமோ?
மகனே ஓ மகனே!!